உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மீறினால் நடவடிக்கை
தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் அதுபோன்று தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
அறிவுரை
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது. தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண் 101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்” எனக் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.