சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

மேலடுக்கு சுழற்சி

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் மேல் என இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது.

இடியுடன் கனமழை

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 11 மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

கவலை

கனமழையால் சாலைகளில் ஆங்காங்க்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கனமழை பெய்துவருவதால் பட்டாசு விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here