மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தன்னை தடுத்து நிறுத்திய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நமீதா வலியுறுத்தியுள்ளார்.
கொஞ்சல் பேச்சு
2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா கெரியரை துவங்கிய நடிகை நமீதா, ‘எங்கள் அண்ணா’ என்ற விஜயகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்து கவர்ச்சிக்கு குறைவில்லாமல் நடித்து வந்த நடிகை நமீதா, நான் அவன் இல்லை, வியாபாரி, பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இவர் கெரியரை தொடங்கிய நாள் முதலே இவரது கொஞ்சலான தமிழுக்கும், நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
குடும்ப வாழ்க்கை
பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும், தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. நமீதா தற்போது நடிப்பிற்கு முழுக்குப்போட்டு விட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தடுத்து நிறுத்தம்
கடவுள் பக்தி கொண்ட நடிகை நமீதா, இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தன்னுடைய கணவருடன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு நடிகை நமீதாவை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை மேலதிகாரியிடம் கொண்டு செல்லப்பட்டு, அவர் நமீதாவை சாமி தரிசனம் செய்ய அனுமதித்திருக்கிறார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. அதிகாரியின் இந்த செயலால் கடுப்பான நடிகை நமீதா, தன்னை அசிங்கப்படுத்திய அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் சேகர்பாபுவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்று ஒரு மோசமான அனுபவத்தை என் வாழ்க்கையில் எதிர்கொண்டதில்லை என ஆதங்கத்துடன் கூறி உள்ள நமீதா, தான் கோவிலில் தரிசனம் செய்யும் வரை பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.