பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல இயக்குநர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமறைவு?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மொட்டை கிருஷ்ணா வழக்கறிஞராக உள்ள நிலையில் அவரது தொலைப்பேசி அழைப்புகளை வைத்து அடிக்கடி அவரிடம் பேசியவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணை
அந்த வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடைப்பெற்றது. வழக்கு ஒன்றின் சம்பந்தமாக தான் பேசியதாக மோனிஷா விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் மோனிஷாவின் கணவரும், இயக்குநருமான நெல்சனிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நெல்சனின் வீட்டுக்கு நேரில் சென்று மோனிஷா, மொட்டை கிருஷ்ணனிடம் தொலைபேசியில் அடிக்கடி எதற்காக பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.