நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள வயநாட்டில் கடற்படை மற்றும் விமானப்படை விமானங்கள் தணிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கொட்டி தீர்த்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவல் படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 340க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏராளமான தொண்டு நிறுவனங்களும் உதவிகளை செய்து வருகின்றன.
பறக்க தடை
ராணுவத்துடன் இணைந்து இந்திய விண்வெளி ஆய்வு மையமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மண்ணில் புதயுண்டவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. காணாமல் போனவர்களின் செல்போன்கள் கடைசியாக காட்டிய சிக்னலை வைத்து மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே வயநாடு பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் விமானப்படை விமானங்கள் தணிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய நபர்கள்
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்துள்ளனர். முண்டக்கையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ள சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் பாறைகளின் மேல் 3 பேர் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அவர்களின் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டு வர மீட்புப்படையினர் முடிவுசெய்துள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வது நாளாக இன்றும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.