நடிகை திரிஷா உள்ளிட்ட மூன்று பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சர்ச்சை கருத்து

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகை திரிஷா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்க செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைதொடர்ந்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

எச்சரிக்கை

இதனிடையே நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக தெரிவித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ் குமார், “பொதுவெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார். பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மன்சூர் அலிகான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து இதுபோன்று சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது எனவும் எச்சரித்திருந்தார்.

அபராதம்

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து நடிகைகள் கூறிய கருத்தை, அவதூறாக கருத முடியாது எனக் கூறி ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here