நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையில் சென்ற காரை மறித்த ஒற்றை காட்டு யானை அதனை துவம்சம் செய்த காட்சி வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்துள்ளது.
சாலையில் உலா
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, நரி, அரிய வகை மான், ஆடுகள் உள்ளிட்ட பலவகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கும், சாலைகளிலும் உலா வருவது வழக்கம்.
கண்ணாடி உடைப்பு
அந்த வகையில், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக மலைப்பாதையில் சுற்றித் திரிகிறது. மேல்தட்டப்பள்ளம் பகுதியில் ஏற்கனவே பேருந்தின் கண்ணாடியை அந்த யானை உடைத்ததை அடுத்து வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேல்தட்டப்பள்ளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அணிவகுத்து நின்றபோது அந்த யானை மீண்டும் அங்கு வந்தது.
தூக்கி வீசிய யானை
அப்போது கார் ஒன்றை யானை தாக்க தொடங்கிய நிலையில், அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காரின் பின் இருக்கையை தூக்கி வெளியே வீசிய யானை, அதை கவிழ்க்க முயன்றதால் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர்கள் பீதியில் உறைந்தனர். இதேபோல் ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சாஸ்தா கோயில் பகுதியிலும் யானைகள் நடமாட்டம் முகாமிட்டுள்ளது. யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், விவசாயிகளும், சுற்றுலா பயணிகளும் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.