நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
‘லியோ’
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு
இதையடுத்து ‘லியோ’ திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
திரைத்துறையை முடக்கவில்லை
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்; தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும். லியோ படத்திற்கு நாளொன்றுக்கு 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும். திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டது இல்லை. திரையுலகம் எங்கள் நட்பு உலகம். திரை உலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசுதான் காரணம்” என்று கூறினார்.