முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் தனது ரோல் மாடல் என நடிகை விஜயசாந்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பல மொழிகளில் டாப்
1980 இல் கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை விஜயசாந்தி. அதன்பிறகு ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால் போன்ற பல படங்களில் நடித்தார். 1980, 90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்த அவர், 1983ல் கன்னட படங்களிலும் நடிக்கத் துவங்கினார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த விஜயசாந்தி “ஈஸ்வர்” என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார்.
சினிமா, அரசியல்
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு நடித்த மன்னன் திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார் விஜயசாந்தி. மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த விஜயசாந்தி, 2006 ஆம் ஆண்டு நாயுடு அம்மா என்ற தெலுங்கு படத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன்பிறகு அரசியலுக்கு சென்ற அவர், 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடித்தார்.
இதுக்குதான் அரசியலுக்கு வந்தேன்
இந்த நிலையில், திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகை விஜயசாந்தி நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “அந்த காலத்திலேயே ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியது நான்தான். சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு சமமாக நடித்ததால் ரசிகர்கள் ”லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தினர். நான் நடித்த ‘ஒசே ராமுலம்மா’ படம்தான் எனக்கு மிகவும் பிடித்த படம். என்னை இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய ரசிகர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். மறைந்த முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனது ரோல் மாடல்”. இவ்வாறு நடிகை விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.