கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி காட்டத்துடன் கூறியுள்ளார்.

சாகசம் – கைது

சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தள்ளுபடி

இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அபாயகரமான சாகசங்கள்

இந்த மனு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், யூ டியூபில் 45 லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள் என்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் ரூ.2 லட்சம் விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இதுபோன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரித்து விடுங்கள்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனவும் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடியூப் தளத்தை மூடிவிட்டு, பைக்கை எரித்து விடும்படி கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here