மதுரை ரயில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா ரயில்
இந்திய ரயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா ரயில்கள் இயக்கட்டு வருகின்றன. அதன்படி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தீப்பிடித்த ரயில்
உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரயில் ஒன்று கடந்த 17 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த ரயிலானது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ரயிலில் இருந்த சிலர் டீ தயாரிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தீ ரயில் பெட்டியில் பரவ தொடங்கியது. கரும்புகையால் ரயிலுக்குள் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கினர். இதற்கிடையில் ரயில் பெட்டியில் தீ மளமள வென பரவி கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது. மேலும் அருகில் இருந்த பெட்டிக்கும் பரவியது.
10 பேர் பலி
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் திடீர் நகர், தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரயில் பெட்டியில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரயில்வே மற்றும் மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உடல் கருகி பலியாகினார். 25 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
நிவாரணம் அறிவிப்பு
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படட்டுள்ளது. ரயிலில் ஏரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்து செல்வது சட்டப்படி குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்து குறித்த தகவல்களை பெற 9360552608, 8015681915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.