தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆக.,10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
லேசான மழை
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
வெளுத்து வாங்கும் மழை
இதனிடையே, சென்னையில் காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் வேலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. அதேபோல், பூந்தமல்லி, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம் போன்ற புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னையில் திடீரென பெய்த கனமழையால் சீதோஷ்ன நிலை மாறி குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது.