மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் உறுதியளித்துள்ளார்.
காவல்துறை விளக்கம்
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை இளைஞர்கள் சிலர் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி நேற்று இணையத்தில் வைரலானது. நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மரண தண்டனை
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “நேற்றைய தினம் வெளிவந்த துயரமான காணொலியில் காட்டப்பட்டுள்ளபடி 2 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி இன்று காலை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். நம் சமூகத்தில் இதுபோன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.