மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் வெடித்து வருகிறது. வன்முறையில் ஈடுபட்ட பலரை பாதுகாப்பு படை சுட்டு கொன்றது. மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கு போலீசாருடன் இணைந்து ராணுவமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பழங்குடியின பெண்கள் இருவரை இளைஞர்கள் சிலர் ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிக்க விடமாட்டோம்
இதனிடையே, மணிப்பூரில் நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; ”குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது. என இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மாநில சட்டம் – ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில முதல்வர்களை வலியுறுத்துகிறேன்” என்றார்.
இந்தியா மன்னிக்காது
38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது, ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது; மோடி அரசும் பாஜகவும் மாநிலத்தின் நுட்பமான சமூக அமைப்பை அழித்து ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் பெருங்குற்றமாக மாற்றியுள்ளது. உங்கள் மௌனத்தை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதயம் நொறுங்கிவிட்டது
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டதாக மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “நமது மனசாட்சி எங்கே? மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் குணத்தை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மன உளைச்சல்
மணிப்பூரில் இருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரித்துள்ளார். மத்திய அரசு வழக்கறிஞரிடம் தனது வேதனையை தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க மத்திய அரசுக்கும், மணிப்பூர் அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலுக்கும் கண்டனம்
மணிப்பூரில் நடைபெற்ற பெண்கள் மீதான வன்முறை சம்பவத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.