மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களவை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்முறை
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருந்தார்.
தடுத்து நிறுத்தம்
அதன்படி, 2 நாள் பயணமாக தில்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட ராகுல் காந்தி மணிப்பூரின் இம்பால் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக காரில் புறப்பட்டார். அப்போது பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.