உடல்நிலை மோசமானதால் பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
பாப் பாடகி
இசை உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் புகழ் பெற்றவர் பிரபல பாப் பாடகி மடோனா. தனது இசையால் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவரது முழுப் பெயர் மடோனா லூயிஸ் சிக்கோனே ஆகும். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பே என்ற நகரில் பிறந்த மடோனா, இசைக்குழு ஒன்றில் பின்னணி பாடும் வேலையில் தனது பயணத்தை தொடங்கினார். பின்பு தனியாகப் பாடல்களை வெளியிட்டார்.
கின்னஸ் சாதனை
இவரது ‘எவ்ரிபடி’ என்ற இசைத் தொகுப்பு, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு ஏராளமான இசை ஆல்பங்களை மடோனா வெளியிட்டார். 1986-ல் மடோனாவின் `ட்ரூ ப்ளூ’ எனும் இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. பின்னர் மடோனா பாடல்கள் எழுதவும், திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இவர் வெளியிட்ட ‘த லைவ் ரெக்கார்ட் ஆஃப் தி டூர்’ எனும் இசை ஆல்பம் முதல் கிராமி விருதையும், 1996-ல் சிறந்த நடிகைக்கான சாதனையாளர் விருதும் பெற்றார்.
![]()
கவலைக்கிடம்
இந்த நிலையில், செரிஷ் படத்தில் நடித்த போது மடோனாவுக்கு ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மடோனாவின் மேலாளர் கை ஓசிரி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது; “ஜூன் 24, சனிக்கிழமையன்று, மடோனாவுக்கு ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பல நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டியிருந்தது. அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் பாடகரின் சுற்றுப்பயணம் மற்றும் பிற வணிகப் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மடோனாவிற்கு திவிர சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிராத்திப்பதாக தெரிவித்துள்ளனர்.















































