சமநிலை கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரத்தை உள்ளடக்கியதே நல்ல சினிமா என்று நினைப்பதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
திறமையான நடிப்பு
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
பிரதிபலிக்க வேண்டும்
அதனைதொடர்ந்து இவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி ஒன்றில், மீண்டும் அதுபோன்ற ஆவேசமான கேரக்டரில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், “உலக வாழ்க்கையில் ஆண், பெண் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமநிலை கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரத்தை உள்ளடக்கியதே நல்ல சினிமா என்று நினைக்கிறேன். அப்படி இல்லாவிட்டால் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. காரணம், சினிமா என்பது நம்முடைய வாழ்க்கையையும், சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். வெள்ளித்திரையிலும், நம் வாழ்க்கையிலும் சமநிலை அடைய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.