பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம், வைர நகைகள் மாயமான விவகாரத்தில் வீட்டில் வேலை செய்த வேலைக்காரர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் யாரும் நகைகள் திருடவில்லை என தெரியவந்துள்ளது.
நகைகள் மாயம்
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் சென்னை ஆழ்வார்பேட்டை 3வது தெருவில் தனது மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி வீட்டில் உள்ள நகைகளை சரிபார்க்கும் போது, அதில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணவில்லை. இதுதொடர்பாக, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின்படி, அபிராமபுரம் போலீசார் விஜய் யேசுதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
‘ரகசிய குறியீடு’
விசாரணையில், நகைகள் அனைத்தும் தர்ஷனாவுக்கு அவரது பெற்றோர் திருமணத்தின்போது அளித்தவை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம் நகைகள் வைக்கப்பட்ட லாக்கரை ‘ரகசிய குறியீடு’ மற்றும் ரகசிய எண்கள் இருந்தால் மட்டுமே திறக்க முடியும். இவை, கணவன் – மனைவிக்கு மட்டுமே தெரிந்தத என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, பாடகர் விஜய் யேசுதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் இன்று வரை துபாயில் இருந்து சென்னைக்கு வரவில்லை. மாயமான நகைகள் குறித்து போலீசார் பலமுறை அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டும் அவர் உரிய பதில் அளிக்கவில்லையாம்.
திருடியது யார்?
பின்னர், வீட்டில் வேலை செய்த 11 வேலைக்காரர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முக்கியமாக சில வேலைக்காரர்களை லாக்கர் பெட்டியின் ரகசிய எண்களை கேட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அதுதொடர்பாக எதுவும் தெரியவில்லை. இதையடுத்து வேலைக்காரர்களிடம் நடத்திய விசாரணை முடிவில், விஜய் யேசுதாஸ் வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து யாரும் நகைகள் திருடவில்லை என்று தெரியவந்துள்ளது. லாக்கரில் உள்ள ரகசிய எண்கள் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்ஷனாவுக்கும் மட்டுமே தெரியும். இதனால் வெளியாட்கள் யாரும் நகைகளை திருட வாய்ப்பு இல்லை என்று இதுவரை நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரிக்க முடிவு
அதேநேரம் போலீஸில் புகார் அளித்த விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நகைகள் மாயமானது தெரியவந்ததாகவும், ஆனால் அப்போது புகார் அளிக்காமல் 40 நாட்கள் கழித்து மார்ச் 30 ஆம் தேதி புகார் அளிக்க என்ன காரணம் என்றும் சந்தேகிக்கபடுகிறது. கணவன் – மனைவி இடையிலான பிரச்னையில் நகைகள் மாயமானதாக தர்ஷனா நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதனால் லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் நகைகள் குறித்து விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.