வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

வருமான வரி சோதனை

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் வி.செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் 2011 – 2015 ஆம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தப்போது போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கி தருவதாகப் பணம் பெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 8 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகக் கூறப்பட்டது.

அமலாக்கத்துறை சோதனை

இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று (ஜூன் 13) 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத்துறை அதிகாரிகள், கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படை பெண் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் இந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திமுகவினர் சிலர் அமைச்சரின் வீடு முன்பு திரண்டுள்ளனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீடு, மண்மங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீடு, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு கணினி இயக்குபவராக பணியாற்றிய சரவணன், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி ஆகியோர் வீடுகள் என 6 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒத்துழைப்பு

இதனிடையே, அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; “இதற்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் எனது வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன நோக்கத்துடன் இந்த சோதனையை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அதைப்பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம். வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி, அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படும். இந்த சோதனை குறித்து எந்த விளக்கம் கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆவணங்கள் அடிப்படையில் கேட்டாலும் பதில் சொல்ல தயார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here