ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சமபத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோர விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார். அதேபோல், மத்திய ரயில்வே அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இரங்கலையும், இழப்பீடுகளையும் அறிவித்துள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசணை மேற்கொண்டார்.
வேதனை, அதிர்ச்சி
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவ்ல் கூறியிருப்பதாவது; “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன கொடுமை
நடிகர் சூரி வெளியிட்டுள்ள பதிவில்: “நெஞ்சு பதைபதைக்கிறது… என்ன கொடுமை இது!! இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
கண்ணீர் கன்னம் தாண்டுகிறது
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத் தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர் கன்னம் தாண்டுகிறது” என்று கூறியுள்ளார்.