ஹீரோவாகவும், குணசத்திர நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பெயர் மாற்றம்

ஹீரோவாகவும், குணசத்திர நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சரத்பாபுவின் உடல் உறுப்புகள் செயலிழந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் கே. பாலச்சந்தர் இயக்கிய “பட்டினத்தில் பிரவேசம்”. அதன்பிறகு தான் சத்யம் பாபுவுக்கு “சரத் பாபு” என பெயர் சூட்டியுள்ளார் பாலச்சந்தர். அந்தப் பெயரே இறுதி வரை அவருக்கு தனி அடையாளத்தையும், பெருமையையும் பெற்றுத் தந்தது.

ஜெயலலிதாவிற்கு ஜோடி

திரைப்படங்கள், சீரியல்கள் என அனைத்திலும் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருந்தார். கடைசியாக பாபி சிம்ஹாவின் “வசந்த முல்லை” என்ற படத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. 1980 ஆம் ஆண்டு வெளியான “நதியை தேடி வந்த கடல்” என்ற படத்தில் முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுதான் ஜெயலலிதாவின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் கடைசி படத்தில் ஹீரோவாக சரத்பாபு நடித்திருந்தது இவருக்கு பெரும் பெருமையை தேடித் தந்தது.

ரஜினியின் நண்பர்

அது மட்டும் இல்லாமல் ரஜினியுடன் இணைந்து முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்துக் கொண்டார். 1973 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராக நுழைந்த இவர், கடைசி படம் வரை தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தும் எந்த ஒரு கிசுகிசுக்களிலும், பிரச்சனைகளிலும் சிக்காத ஒரு எதார்த்த நடிகர். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் நண்பர் என்பதாலேயே அவருடன் பல படங்களில் பணியாற்றி இருந்தார்.

நிலைக்காத 2 திருமணங்கள்

1971 ஆம் ஆண்டு ரமா பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரமாவும் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன்பிறகு இவர் எம்.என். நம்பியாரின் மகள் சினேகலதா தீக்ஷத் என்பவரை 1990 ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இரண்டு திருமணங்கள் செய்த போதும் சரத்பாபு இறுதிவரை தனியாகவே வாழ்ந்து வந்தார் என்பது மிகவும் வருத்தமான செய்தி தான்.

கடைசி நாட்கள்

நடிகர் சரத்பாபு கடந்த இரண்டு மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட செப்சிஸ் நோயால் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின. கடைசி சில நாட்கள் கவலைக்கிடமான நிலையில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இவர் உயிரிழந்த செய்தி திரையுலகினரை மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வந்தனர். நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல் இறுதி மரியாதைக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி அளவில் கிண்டியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here