கேரளாவில் இளம் மருத்துவர் ஒருவர் நோயாளியால் கொல்லப்பட்டத்தையடுத்து அம்மாநிலத்தில் மருத்துவர்களை பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.
படுகொலை
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாக்காரா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் வந்தனா தாஸ். 22 வயதுள்ள இளம் மருத்துவரான இவர், சில தினங்களுக்கு முன்பு நோயாளி ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், சுகாதாரப் பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமென வலியுறுத்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள உயர்நீதிமன்றமும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அவசர சட்டம்
இந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அந்த மசோதாவுக்கு கேரள அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.