தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; நேற்று (மே 09) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (மே 10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது வட – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வட – வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (மே 11) காலை தீவிர புயலாகவும், நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு வடக்கு – வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து (மே 13) முதல் சற்றே வலுக்குறைந்து (மே 14) காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மிதமான மழை

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மே 11) முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

மேகமூட்டம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிககளில் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 11 ஆம் தேதி காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12 ஆம் தேதி அன்று மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13 ஆம் தேதி அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here