இட உரிமையாளரின் நெருக்கடியால மனமுடைந்த நடிகை சதா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திறமையான நடிகை
கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சதா. அதன்பின்னர் ‘அந்நியன்’, ‘திருப்பதி’, ‘டார்ச்லைட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் அவர் நடித்தார்.
காதலித்து நடத்தினேன்
2019 ஆம் ஆண்டு ‘எர்த்லிங்ஸ் கபே’ என்ற பெயரில் மும்பையில் ஒரு ஹோட்டலை தொடங்கினார் சதா. பின்பு அதிலே தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அந்த ஹோட்டலை திடீரென்று இடத்தின் உரிமையாளர் காலி செய்ய சொல்லியுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; “23 ஏப்ரல் 2019 அன்று இந்த ஹோட்டலை திறந்தோம். மிகவும் காதலித்து நடத்தி வந்தேன். தினமும் 12 மணி நேரம் அந்த ஹோட்டலிலே செலவழித்தேன். கடந்த ஏப்ரல் 23 அன்று அந்த இட உரிமையாளர் ஃபோன் செய்து இடத்தை காலி செய்ய சொல்லி கேட்டார். நான் எவ்வளவோ முயற்சித்தேன். அவர் மனம் மாறும் படி தெரியவில்லை. வாடகையும் சரியாக கட்டி வந்தேன். ஆனால் இட உரிமையாளர் சொல்லிவிட்டதால் இம்மாத இறுதியில் காலி செய்யவுள்ளேன். இதனால் கடந்த ஒரு வாரமாக அழுது கொண்டிருக்கிறேன்” என அழுதபடி பேசினார்.