தன்னை தாக்க வந்த மூன்று சிறுத்தைகளை தேன் வளைக்கரடி ஒன்று சிதறவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வன விலங்குகள்
இந்திய வனத்துறை அதிகாரிகள் பலர் காட்டில் பதிவு செய்யப்பட்ட வனவிலங்குகளின் வீடியோக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், ரவுண்டு கட்டிய மூன்று சிறுத்தைகளை ஒரு தேன் வளைக்கரடி சிதறவிட்டிருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஹனி பேட்ஜர்
பெரிய அளவில் அறியப்படாத இந்த தேன் வளைக்கரடி விலங்கு என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். ஹனி பேட்ஜர் (Honey Badger) என்று அழைகப்படுகிற தேன் வளைக்கரடி, விலங்கு கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது தென்மேற்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. தேன் வளைக்கரடியானது மரநாயின் தோற்றத்தைப் போல இருக்கும். இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் சிறிது வேட்டை விலங்காகவே காணப்படுகின்றது.
சிதறிய சிறுத்தை
சமீபத்தில் வனப்பகுதி ஒன்றில் சுற்றித் திரிந்த தேன் வளைக்கரடி ஒன்றை 3 சிறுத்தைகள் வேட்டையாட முயற்சிக்கிறது. வேகத்திற்கும், வேட்டைக்கும் பெயர் போன சிறுத்தைகளை இந்த ஒற்றை தேன் வளைக்கரடி அலறவிட்டிருக்கிறது. வேட்டையாட வந்த சிறுத்தைகளை, தைரியம் ஒன்றை மட்டும் மனதில் நிறுத்தி, கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் சண்டை செய்திருக்கிறது அந்த விலங்கு. இதனால் பயந்தபோன 3 சிறுத்தைகளும் அதனை வேட்டையாடுவதை விட்டுவிட்டு திரும்பி சென்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.