நாகார்ஜூனா மகன் அகில் நடிப்பில் வெளியான ஏஜென்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததையடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கலவையான விமர்சனம்
நடிகை நாகார்ஜுனா- அமலா ஜோடியின் மகன் அகில் நடிப்பில் ஏஜென்ட் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது. ஸ்பை திரில்லர் படமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஏஜென்ட் திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். அகிலுடன் இணைந்து மம்முட்டி, வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார்.
படுதோல்வி
பெரிய பட்ஜெட்டில் உருவான ஏஜென்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம், இதுவரை ரூ.10 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. OTT, தொலைக்காட்சி உரிமம் என்று எடுத்துக் கொண்டாலும் மேலும் ரூ.10 கோடி மட்டுமே வரும். எப்படி பார்த்தாலும் இது பட தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தையே கொடுத்துள்ளது. இப்படத்தின் தோல்விக்காக தயாரிப்பாளர் அனில் சுன்காரா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொறுப்பு ஏற்கிறேன்
இதுகுறித்து தயாரிப்பாளர் அனில் சுங்காரா கூறியிருப்பதாவது, “ஏஜென்ட் படத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். முழுமையான ஸ்கிரிப்ட்டுடன் படப்பிடிப்புக்குச் செல்லாமல் தவறு செய்தோம். கொரோனாவால் பிரச்னைகளைச் சந்தித்தோம். இதற்காக எந்த சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. இந்த ‘காஸ்ட்லி’ தவறில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பால் இந்த இழப்பை ஈடுகட்டுவோம்” என்று கூறியுள்ளார்.