முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டார்.
புகைப்பட கண்காட்சி
முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை திருச்சியில் 23ஆம் தேதி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் தமிழ்நாடு முதல்வரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இதனை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை நேரில் பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
ரஜினி – சிவகார்த்திகேயன் மோதல்
கண்காட்சியை பார்வையிட்ட பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; “முதல்வர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று பற்றிய புகைப்படக் கண்காட்சி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புகைப்படங்களை பார்க்கும்போது தெரிந்து கொண்டது என்னவென்றால், எவ்வளவு பெரிய உயரத்தை அடையணுமோ, அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டி தான் வரணும் என்று தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தாண்டி நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு தமிழக முதல்வர் வந்திருக்கிறார்” என்று தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதன்பிறகு, ஜெயிலர் படமும், மாவீரன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், “ஜெயலர் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர் தகவல் வெளிவந்த பிறகு அதை பற்றி பேசலாம்” என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.