கமல்ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

நழுவ விட்ட PS வாய்ப்பு
கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன், ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதிஹாசன் கூறி இருப்பதாவது, “மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு எனக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்தின் பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில் படத்தில் நடிக்க கேட்டிருந்தனர். ஆனால் அப்போது நான் பல படங்களில் நடித்து வந்ததால், பொன்னின் செல்வன் குறித்து நான் யோசிக்கவில்லை.
அப்பாவுடன் நடிப்பு
“பல வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் எனது அப்பா நடிக்கிறார். அவரது ரசிகர்களைப் போலவே நானும் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். எனது அப்பா நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். இதுவரை என் அப்பா படத்தில் நான் நடித்ததில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன். மேலும் இரட்டை வேடத்தில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதுபோல் கதாபாத்திரம் அமைந்தாலும் நான் நடிப்பேன். பல கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் படம் இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.













































