நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; “தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.,25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மிதமான மழை
நாளை (ஏப்.,26) மற்றும் நாளை மறுநாள் (ஏப்.,27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.04.2023 மற்றும் 29.04.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி மின்னலுடன் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
பரவலாக மழை
கடந்த 24 மணி நேரத்தில் பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 7 செ.மீ., திருச்செந்தூர், மேட்டுப்பட்டி, அடார் எஸ்டேட் (நீலகிரி), வட்ராப் (விருதுநகர்), குன்னூர், கோத்தகிரி தலா 6 செ.மீ., அழகரை எஸ்டேட் (நீலகிரி), பிலவாக்கல் (விருதுநகர்), மைலம்பட்டி (கரூர்), மதுரை தெற்கு, புதுச்சேரி, பேரையூர் (மதுரை), சாத்தியார் (மதுரை), ஓமலூர் (சேலம்) தலா 3 செ.மீ., சிவகங்கை, பர்லியார் (நீலகிரி), பாலக்கோடு (தருமபுரி), கிண்ணக்கொரை (நீலகிரி), முகையூர் (விழுப்புரம்), கடவூர் (கரூர்), சித்தார் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), சந்தியூர் (சேலம்) தலா 2 செ.மீ., சங்கரன்கோவில், குப்பணம்பட்டி (மதுரை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), நத்தம், ஆம்பூர், தல்லாகுளம், ஆண்டிபட்டி, விளாத்திக்குளம், அவலூர்பேட்டை, திருவாலங்காடு, அம்பத்தூர், அரக்கோணம், காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்.,25) மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.