கோடை காலம் தொடங்கியதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் கோடை விழாக்களின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோடை விழா
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை காலத்தின் போது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்கியதையடுத்து உதகைக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கோடை விழா நிகழ்ச்சிகளுக்கான தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேதி அறிவிப்பு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் துவங்கி 23ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. மே 12,13,14 தேதிகளில் கூடலூரில் 10வது வாசனை திரவிய கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே 13,14,15 தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது. மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.