நடிகர் அஜித்குமார் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்.
தந்தை மறைவு
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி ஊர்வலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தந்தையின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அஜித்குமாரும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். மின்மயானத்தை சென்றடைந்த சுப்பிரமணியத்தின் உடலை நடிகர் அஜித் தூக்கி சென்றார். பின்னர் அவரின் உடலுக்கு அஜித்தின் குடும்பத்தினர் சார்பில் குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுப்பிரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
வருத்தம்
நடிகர் அஜித் தந்தையின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மனவேதனை
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.P.சுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா, அப்பா தான்
இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எச்.ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, நடிகர் அஜித்குமாருடைய தந்தை மறைவு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எந்த அளவுக்கு இழப்பாக இருக்கும் என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி அந்த தந்தையை இழந்து தவித்து கொண்டிருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.