ஈரமான ரோஜாவே 2 தொடரை விட்டு நடிகை ஸ்வாதி வெளியேறப்போவதாக வெளிவந்த தகவலுக்கு அவர் புகைப்படம் மூலம் பதில் கொடுத்துள்ளார்.
மாறி நடக்கும் திருமணம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் சித்தார்த், கேப்ரில்லா, திரவியம் மற்றும் ஸ்வாதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சித்தார்த்துக்கு ஜோடியாக கேப்ரில்லாவும், திரவியம் ஜோடியாக ஸ்வாதியும் நடித்து வருகின்றனர். இத்தொடரில் தம்பி காதலித்த பெண்ணை அண்ணன் மணந்து கொள்கிறார். அண்ணனுக்காக நிச்சயித்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார். ஒரே வீட்டில் வசித்து வரும் இந்த நான்கு பேருக்கும் ஏற்படும் சங்கடங்களை மையமாக வைத்து ஈரமான ரோஜாவே 2 சீரியல் உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சித்தார்த்துக்கு, கேப்ரில்லா ஏற்கனவே யாரையோ காதலித்து இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதனால் விவாகரத்து செய்ய நினைக்கும் சித்தார்த், விவாகரத்து பெற்று கேப்ரில்லாவை விட்டு பிரிகிறார். ஆனால் திருமணம் செய்தபிறகு சித்தார்த்தையே காதலித்து வரும் கேப்ரில்லா மனமில்லாமல் சித்தார்த்தை விட்டு பிரிகிறார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
தினம் தினம் சுவாரஸ்யமாக செல்லும் ஈரமான ரோஜாவே 2 தொடர் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் திரவியம் மற்றும் ஸ்வாதியின் ஜோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அவர்களின் குறும்பான நடிப்பு இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திரவியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எது நடந்தாலும் அது ஒரு காரணத்திற்காக தான் இருக்கும், எல்லா மாற்றமும் நல்லதுக்காக தான், நம்மை சிறப்பாக மாற்றிகொள்ள மாற்றங்கள் மிகவும் முக்கியம்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் திரவியம்க்கு ஜோடியாக நடிக்கும் ஸ்வாதி, இந்த சீரியலை விட்டு விலகப் போகிறார் என்று தகவல்களை பரப்பி வந்தனர். ஆனால் அதை மறுக்கும் விதமாக நடிகை ஸ்வாதி, திரவியமுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.