நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
தந்தை மறைவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். அவரது தந்தை இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அஜித்தின் தந்தை பெயர் சுப்பிரமணியன். சுப்பிரமணியத்திற்கு மொத்தம் மூன்று மகன்கள். அனில் குமார், அஜித் குமார், அனுப் குமார். சுப்ரமணியம் அஜித்தின் பெசன்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஓய்வில் இருந்த சுப்பிரமணியம் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இழப்பு அஜித் குடும்பத்தை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது வேர்ல்ட் டூர் சென்றிருக்கும் அஜித் குமார் விரைவில் நாடு திரும்புவாரா? இல்லையா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அஜித்தின் தந்தை மறைவு செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் அஜித்துக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் தந்தை உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் இன்று இறுதிச் சடங்கு செய்யப்படுகின்றது.
4 ஆண்டுகளாக பக்கவாதம்
இந்நிலையில் அஜித்தின் தந்தை திடீர் மறைவு குறித்து அவரது சகோதரர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தையார் பி.எஸ்.மணி அவர்கள் பல நாட்களாக உடல்நலம் இன்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் எங்கள் தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்து வந்து எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம். மேலும் எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும் அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கை சிறப்பாக இதுவரை காலமும் வாழ்ந்து வந்தார். நாம் கவலையில் உள்ள இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், எங்களை தொலைபேசியிலும், கைப்பேசியலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பி விசாரித்து வருகின்றனர். தற்போது சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். அஜித் குமாரின் தந்தை இறப்பு செய்தியை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.