நடிகர் மாரிமுத்து சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்களை காட்டமாக பேசியுள்ளார்.
குணச்சித்திர நடிகர்
இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே. சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். நடிகராக தன்னை நிரூபித்து தற்போது பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார். வாலி, கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, கொடி, பைரவா, எமன் உட்பட 75 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
மாட்டிக்கொண்ட மாரிமுத்து
தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வரும் மாரிமுத்து, சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாரிமுத்து. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது. அந்த பேட்டியில் மாரிமுத்து பேசியதாவது; “பொண்ணுங்க என்றால் குனிந்த தலை நிமிராமல் இருக்க வேண்டும், ஆணுக்கு ஒரு அடி பின்னால் தான் பெண்கள் நடக்க வேண்டும், அது தான் தமிழ் பெண்ணுக்கு அழகு” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மாரிமுத்துவை பலவிதமாக விமர்சித்து வந்தனர். மேலும் கமெண்ட்கள் மூலம் அவரை திட்டி தீர்த்து வந்தனர்.
அறிவு இருக்கா? இல்லையா?
இதைப் பார்த்த மாரிமுத்து, “நாடகத்தின் வீடியோக்களுக்கு கீழே கமெண்டில் என்னை திட்டி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அறிவு இருக்கா? இல்லையா? என்று தெரியவில்லை. அது ஒரு நாடகத்தில் வருகிற கதாபாத்திரத்தின் நடிப்பு என்பதுகூட தெரியாமல் இருக்கிறார்கள். இந்த மாதிரி முட்டாள்களை எல்லாம் ஊசி போட்டு கொல்ல வேண்டும். இவங்க எல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா இருக்காங்கன்னு தெரியவில்லை” என்று பேசியுள்ளார். இவர் பேசிய இதுவும் தற்போது சர்ச்சையாகவே மாறி உள்ளது. கடந்த சில தினங்களாகவே மாரிமுத்துவை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து இதுபோல் பிரச்சனைகளின் சிக்கிக் கொள்கிறார் மாரிமுத்து.