மறைந்த இளம் நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதிர்ச்சியான செய்தி
நடிகர் புனித் ராஜ்குமாரின் நிஜ பெயர் லோஹித் ராஜ்குமார். 17 மார்ச் 1975 ஆம் ஆண்டு பிறந்த புனித் ராஜ்குமார், சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ரியல் சூப்பர் ஸ்டாராகவே இருந்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான புனித் ராஜ்குமார் தனது 10வது வயதில் தேசிய விருதை பெற்றார். 2002 ஆம் ஆண்டு அப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளை கொண்ட புனித் ராஜ்குமார் 29 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்தார். 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட புனித் ராஜ்குமார் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் உயிரிழந்த செய்தி திரையுலகையினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நிஜ ஹீரோ
ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஏழை மக்களுக்கு உதவி செய்வது போன்ற சமூகத் தொண்டில் ஆர்வம் கொண்டிருந்த புனித் ராஜ்குமார், 45 இலவச பள்ளிகள், 26 அனாதை இல்லம், 16 முதியோர் இல்லம், 19 பசு காப்பகங்கள், சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிகள், சுமார் 1800 மாணவர்களுக்கு இலவச கல்வி இவை எல்லாவற்றையும் தனது கடமையாக எண்ணி செய்து வந்தவர். திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஹீரோவாகவே திகழ்ந்தார். இன்றும் கர்நாடகாவில் எங்கு சென்றாலும் புனித் ராஜ்குமாரின் புகைப்படங்கள் வைத்து தினமும் மாலை போட்டு அவரை ஒரு தெய்வமாகவே வழிபட்டு வருகின்றனர். இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், மக்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த புனித் ராஜ்குமார் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.















































