சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்ட டாப் 5 திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
36 வயதினிலே
பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை கொண்டாடும் விதமாக மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சினிமா துறையில் சாதனை படைத்து வரும் முன்னணி நடிகைகளையும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கும் எப்பொழுதும் தனி அங்கீகாரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்திருந்த நடிகை ஜோதிகா “36 வயதினிலே” படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தை என்று அதையே கவனித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களது சுய கௌரவத்தையும், திறமைகளை பற்றியும், கனவுகளையும் மறந்து விடுகின்றனர். இதனை சுட்டிக்காட்டும் திரைப்படமாக இந்த 36 வயதினிலே உருவாக்கப்பட்டு இருக்கும்.
பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த சிறுமியை ஒரு பெண் கலெக்டர், அதிகார வர்க்கத்தின் பல தடைகளை மீறி காப்பாற்றும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் நயன்தாரா கெரியருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. ஜோதிகா நடிப்பில் 2020 இல் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. வழக்கறிஞராக நடித்த ஜோதிகா சமுதாயத்தை எதிர்த்து பேசும் வசனங்களும், படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பாலியல் வன்கொடுமை
சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படம், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்தும், அதனால் அந்த குழந்தைகள் மனரீதியாக எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக காட்டிய திரைப்படம். ஒரு குழந்தையை தனது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வரும் காட்சியில் ஒரு பெண்ணாக யாருக்கும் அச்சப்படாமல், பாசம் குடும்பம் என்று யாருக்கும் அஞ்சாமல் தவறு செய்தால் தனது தந்தைக்கு தண்டனை பெற்று தரும் காட்சிகளில் சாய்பல்லவி அற்புதமாக நடித்திருந்தார். பெண்கள் பல துறைகளிலும் சாதித்து வரும் இந்த சமயத்தில் டாக்ஸி டிரைவராகவும் தங்களை நிரூபித்து வருகின்றனர். டாக்ஸி டிரைவராக இருக்கும் பெண்கள் என்ன என்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டி இருக்கும் திரைப்படம் தான் டிரைவர் ஜமுனா. தனது தந்தையை கொன்றவர்களை தெளிவாக திட்டமிட்டு கொள்ளும் டிரைவர் ஜமுனா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.