நடிகை மம்தா மோகன் தாஸ் தான் புற்றுநோயால் அவதிப்பட்டதையும், அனுபவித்த வேதனைகளையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சில தமிழ் படங்கள்
மலையாளத்தில் பிரபல நடிகையான நடிகை மம்தா மோகன்தாஸ், சிவப்பதிகாரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கரு. பழனியப்பன் இயக்கியிருந்த இந்த படத்தில் விஷால், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சிவப்பதிகாரம் படத்திற்குப் பிறகு குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற சில படங்களில் மட்டுமே மம்தா நடித்து இருந்தார். முழுக்க முழுக்க மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை மம்தாவிற்கு, புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார்.
ரொம்ப கஷ்டப்பட்டேன்
நடிகை மம்தா தனக்கு புற்றுநோய் ஏற்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது, “எனக்கு புற்றுநோய் வந்தபோது முதலில் எனது தோழிகளிடம் தான் அதை கூறினேன். எனக்கு அவர்கள் தைரியம் கொடுத்து பேசினார்கள். ஆனால் புற்றுநோய் வந்ததை எண்ணி நான் தனிமையில் இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். எப்போதும் கேமரா முன்பு இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். ஏன் இறந்து விடுவோமோ? என்றுகூட நான் பயந்துள்ளேன். அதனாலே எனது பிரச்சினையை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். யாராவது என் உடல் மீது இந்த மச்சங்கள் எப்படி வந்தது என்று கேட்டால் எனது இன்ஸ்டாவை போய் பாருங்கள் என்று முகத்தில் அறைந்த மாதிரி பதில் கூறி விடுவேன்” என்று மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் ஊமை விழிகள் என்ற திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கிலும், மலையாளத்திலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.