தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இரு அணி
அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அக்கட்சியை வழி நடத்தி செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் தென்னரசு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரச்சார களத்தில் உள்ளார்.
ஆலோசனை
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தனது அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 20-ந்தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; “அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வருகிற 20-ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.