தமிழ் திரையுலகம் என் திறமையை மதிக்கவில்லை என நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கூறி இருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
என்னை மதிக்கவில்லை
2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் போடா போடி. இந்த படத்தின் மூலம் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திரையுலகிற்கு அறிமுகமானார். சிம்புவுக்கு ஜோடியாக நடித்த வரலக்ஷ்மி, முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற்றார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார் வரலக்ஷ்மி சரத்குமார். தற்போது தமிழ் சினிமா என் திறமையை மதிக்கவில்லை என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கில் தான் வாய்ப்பு
தயாள் பத்மநாபன் இயக்கும் கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார். இப்படம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; கொன்றால் பாவம் படத்தில் நடிக்க நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டேன். அருமையான கதை, எனது கெரியரில் வித்தியாசமான படமாக இருக்கும். நான் அதிக தமிழ் படங்களில் நடிக்கவில்லை, தெலுங்கு படங்களுக்கு தான் முக்கியம் கொடுக்கிறேன் என்கிறார்கள். தமிழில் வாய்ப்பு வந்தால் தானே நடிப்பதற்கு. நானே படம் தயாரித்து நானே நடித்துக் கொண்டிருக்க முடியுமா? தெலுங்கில் வாய்ப்புகள் வருகிறது நடிக்கிறேன்.
தமிழில் வாய்ப்பு இல்லை
தெலுங்கில் அதிக படங்கள் நடிப்பதால் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டேன். ஒரு நடிகையாக எங்கே எனக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கிறதோ அங்கு தானே செட்டில் ஆக முடியும். தமிழ் சினிமாவில் ஒன்பது வருடங்களாக கிடைக்காத புகழும், அங்கீகாரமும், அன்பும் தெலுங்கு சினிமாவில் எனக்கு கிடைத்துள்ளது. நான் நடித்த கதாபாத்திரங்கள் வைத்து ரசிகர்கள் என்னை அந்த கதாபாத்திரமாகவே அழைக்கிறார்கள். என் திறமையை பார்த்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வாய்ப்பு தருகிறார்கள். தமிழில் நான் தாரை தப்பட்டை படத்தில் உயிரை கொடுத்து நடித்தேன். அதற்கு பிறகு எனக்கு வாய்ப்பு குவிந்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. சர்கார் படத்திற்கு பிறகாவது வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினேன். அதுவும் நடக்கவில்லை. என்னை வளர்த்த தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் அன்பு உண்டு. எங்கு வாய்ப்புகள் வருகிறதோ அங்கு அதிக படங்களில் நடிப்பேன். வாய்ப்புகள் வந்தால் சென்னைக்கு மீண்டும் வந்து விடுவேன்” இவ்வாறு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.















































