கடந்த 8 ஆண்டுகளாக நடிகர் அஜித் குமாரை சந்திக்க முயன்று சோர்வடைந்துவிட்டேன் என இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஹிட் திரைப்படம்
தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ், அடுத்ததாக மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இதன்மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனராக அல்போன்ஸ் புத்ரன் உயர்ந்தார்.
வசூல் சாதனை
கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் பட்டியலில் ஒன்றானது. மலையாளம் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது. நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பிரேமம்’ திரைப்படம், 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் ஹீரோவாக நிவின் பாலி, மலர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, மேரி ஜார்ஜாக அனுபமா பரமேஸ்வரன், செலின் ஆக மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். மூன்று அழகான பெண்கள், யதார்த்தம் நிறைந்த காதல், கண்ணீர், சோகம், நய்யாண்டி என இளைஞர்களுக்கு ஏற்ப படத்தை இயக்கி இருப்பார் அல்போன்ஸ் புத்ரன்.
விமர்சனங்களுக்கு நன்றி
‘பிரேமம்’ படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிருத்விராஜ் – நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எந்தவித புரொமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘கோல்ட்’ வெளியானது. இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் பார்த்த ரசிகர்கள், தங்களுக்கு இப்படம் பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நெகடிவ் விமர்சனங்களுக்கு நன்றி என அல்போன்ஸ் சிம்பிளாக பதிலளித்தார்.
முடியல…
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்ரனின் கமெண்டில், ”அஜித்துடன் ஒரு படம் பண்ணுங்க தலைவா” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அல்போன்ஸ் புத்ரன் பதிலளித்துள்ளதாவது; அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. அஜித் சாருக்கு ‘பிரேமம்’ படம் பிடிச்சிருக்குன்னு நிவின் ஒருமுறை என்கிட்ட சொன்னாரு. அஜித் சார பாக்க 8 வருஷமா முயற்சி செய்து சோர்ந்துட்டேன். நீங்கள் கேட்கும் போது முதலில் கோபம் வரும். அப்புறம் நீங்களும் என்ன மாதிரி ஒரு ஏகே ரசிகர் தானே என்று நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் 100 நாள் ஓடும். இதே மாதிரி தான் உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.