ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் மும்முரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.
விரைவில் முடிவு
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்ணேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; வரும் இடைத்தேர்தலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் எங்கள் நிர்வாகிகளும், தொண்டர்களும் இருக்கின்றனர். இதையொட்டி சில நகர்வுகளை செய்து கொண்டிருக்கிறோம். வரும் 27-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும் அந்த தொகுதியில் நானே போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.