பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பணிகள் மும்முரம்
இந்த நிலையில், பழனி முருகன் கோவிலை ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ரூ.16 கோடி செலவில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி நடைபெற்று முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக, கடந்த மாதம் 25-ம் தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. பழனி முருகன் கோவிலில் வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழில் குடமுழுக்கு
குடமுழுக்கை காண பக்தர்கள் ஏராளமாக வருவர் என்பதால் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. குடமுழுக்கு அனுமதி பெற விரும்புபவர் அறநிலையத்துறை வலைதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு குறித்து பேசியுள்ள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பழனி முருகன் கோவிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்றும் பழனி முருகன் கோவில் பெரும் பொருட்செலவில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.