பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகளில் முதல் நாளிலேயே சென்னையில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர்.
சிறப்பு பேருந்து
பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, ஜன.12, 13, 14 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் உட்பட 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 340 மாநகர பேருந்துகள் இயங்கின.
குவியும் மக்கள்
முதல் நாளான நேற்று (ஜன.12) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 651 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,508 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வண்டலூர் வழியாக இயக்கப்பட்டன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து தென் தமிழகம் செல்ல முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் வண்டலூர், கிளாம்பாக்கம் போன்ற இடங்களுக்குச் சென்று பேருந்துகளில் பயணித்தனர். முதல் நாளில் சென்னையில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர்.
கடும் நெரிசல்
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிறு) கொண்டாடபட உள்ளது . சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17 ஆம் தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தனியார் பேருந்துகள், கார் மற்றும் இதர வாகனங்களில் பொதுமக்கள் தனது சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர். இதனால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.