2022-ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் நேற்று முடித்துவைத்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பொங்கல் பண்டிகைக்கு பின்பு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும், மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் பொங்கலுக்கு பின்பாக கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டமானது அதிகபட்சமாக 4 நாட்கள் வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விவாதிப்பார்கள் அதற்கு சட்டபேரவையின் கூட்டத்தின் கடைசி நாளில் முதலமைச்சர் பதில் அளித்து பேசுவார். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிர்கட்சி துணை தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பபாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இருக்கை ஒதுக்கீடு?
எனவே இந்த முறை தொடங்கவுள்ள கூட்டத்திலும் ஓபிஎஸ்க்கு எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கான இருக்கை ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே இந்த முறை சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சருக்கு பின் வரிசையில் உதயநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அமைச்சரவையில் புதிதாக உதயநிதி இடம்பெற்றுள்ளதன் காரணமாக அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அமைச்சரவை சீனியாரிட்டி அடிப்படையில் உதயநிதிக்கு 10-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் முன் வரிசையில் 15 பேர் வரை அமரலாம் எனவே உதயநிதி 3-வது வரிசையில் இருந்து முதல் வரிசைக்கு மாற்றப்படவுள்ளார்.