பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டங்களை வழங்கிய முதல்வர்
சென்னை ராணிமேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர்; பட்டம் பெரும் நாள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான நாள். மாணவர்கள் பெற்ற அறிவு, அவர்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். பட்டம் பெறுவர்கள் கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து அல்ல.
104 ஆண்டுகால பழமை
இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. 104 ஆண்டுகளில் ராணி மேரி கல்லூரி உருவாகியுள்ள பட்டதாரிகளை நினைத்து பார்த்தால் மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது. ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. ராணி மேரி கல்லூரியை இடிக்க கடந்த கால அதிமுக அரசு முயன்றது. ராணிமேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தேன். இதனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம்.
அடிப்படை உரிமை
பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்கிறது. லட்சக்கணக்கான பெண்களுக்கு தன்னம்பிக்கையை தந்தது ராணி மேரி கல்லூரி என்றால் மிகையல்ல. ராணி மேரி கல்லூரியின் வளாகத்திலேயே விடுதி கட்டித் தரப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். எத்தனையோ கலாச்சாரம், மத தடைகளை கடந்து தான் பெண் கல்வியில் தற்போதைய நிலையை எட்டி இருக்கிறோம். பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் அல்ல அடிப்படை உரிமை. பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு கலைஞர் அளித்தார், தற்போது 40% ஆக உள்ளது. காலப்போக்கில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கோரும் நிலை கூட ஏற்படலாம். மகளிர் தொழில் முனைவோர் உதவி திட்டத்தை கொண்டு வந்தோம். புதுமை பெண் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் ராணி மேரி கல்லூரியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதுமை பெண் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 1,039 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் விழாவில் உரையாற்றினார்.