கே.ஜி.எஃப்.-2 திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
வசூல் வேட்டை
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் கேஜிஎஃப்-2. கடந்த 2018-ல் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் 1,500 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
தடைவிதிக்க முடியாது
இந்த நிலையில், கே.ஜி.எஃப்-2 படத்திற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கே.ஜி.எஃப்-2 படத்தின் டிரைலரில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், புகைப்பிடித்தலை ஊக்குவிப்பது போலவும் காட்சிகள் உள்ளதால் அப்படத்தை திரையிடக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, கே.ஜி.எஃப்-2 திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால், அப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.