அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை நடிகை
சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். “8 தோட்டாக்கள்”, “தானா சேர்ந்த கூட்டம்” உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் அதிருப்தியில் இருந்தார். பின்னர் தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி தரக்குறைவாக பேசி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார். ஒருபடி மேலே போய், சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேந்தவர்களைப் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தலைமறைவு – கைது
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுன், தன்னை கைது செய்யவே முடியாது என்றும் அது கனவில்தான் நடக்கும் எனவும் காவல்துறையினருக்கு சவால் விட்டு இருந்தார். இந்த நிலையில், கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஷாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்கள் சிறையில் இருந்த மீரா மிதுன், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
தேடும் போலீஸ்
இதுதொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் நேரில் ஆஜராகாத நிலையில், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதி போலீஸாருக்கு உத்தரவிட்டார். ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸார் மீரா மிதுனை தேடி வருகின்றனர்.