விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
‘இன்னுயிர் காப்போம்’
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும். அதேபோல், விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அட்டை இல்லாதவரும் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் சிக்கியவர்கள் பிற நாடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தாலும் இதன்மூலம் சிகிச்சை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 610 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
முதல்வர் அறிவுரை
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிப்பது வருத்தத்தை அளிப்பதாகவும் விபத்து காரணமாக எந்த உயிரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருப்பதாகவும் கூறினார். உயிர்காக்க அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர், அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில்தான் தனிமனித ஒழுக்கம், சமூக பண்பாடு இருக்கிறது என்றும் தெரிவித்தார். சாலை விதிகளை போலீசாருக்காக கடைப்பிடிக்காமல் தனி மனித ஒழுக்கத்திற்காக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக வேகமாக பயணம் செய்யக்கூடாது என அறிவுரை கூறிய மு.க.ஸ்டாலின், சாலைகளில் வேகமாக செல்வதைவிட உழைப்பில் வேகத்தை காட்ட வேண்டும் என்றார்.