தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

‘ஆரஞ்சு அலர்ட்’

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை என கூறப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் கனமழை

நாளை டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பேராவூரணி, அதிராமபட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் மலையூரில் தலா 17 செ.மீ. மழையும், புவனகிரியில் 14 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று முதல் நவம்பர் 05-ம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள்
அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here