தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது கூறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் நலனும், பாதுகாப்பும் முக்கியம் என்றார்.
2 நாளில் முடிவு
மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தேர்வை நடத்த வேண்டும் என பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்திருந்த நிலையில், நேற்று சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அமைச்சர் கூறினார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின்னர், 2 நாட்களில் முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.